சென்னை கொருக்குப்பேட்டையில் அம்மா உணவகத்தை சுற்றி கழிவுநீர் சலையில் ஓடுவதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கொருக்குப் பேட்டை 47-வது வார்டில் உள்ள மீனம்பாக்கம் நகர் 4-வது தெருவில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இங்கு அந்தப் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் தினம்தோறும் வந்து பசியாறி செல்கின்றனர்.

அருகில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பி அதிலுள்ள கழிவுநீர் வெளியேறி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அது மட்டுமின்றி அப்பகுதியில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பதாக குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனக் கூறும் பொதுமக்கள் விரைவாக மாநகராட்சி நிர்வாகம் இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.