ஆப்கானிஸ்தானின் வெற்றிக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்ட இளம் ரசிகர் ஒருவர் முஜீப் உர் ரஹ்மானைக் கட்டிப்பிடித்தார்.

2023 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. ஒருநாள் உலக கோப்பையில் 2015ஆம் ஆண்டு முதல் கடந்த 17 ஆட்டங்களில் 16ல் தோல்வியடைந்த நிலையில், 2015ல் ஸ்காட்லாந்திற்கு எதிராக ஆப்கானிஸ்தானின் ஒரே ஒரு வெற்றி மட்டுமே கிடைத்தது. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் அணி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஒட்டு மொத்தமாக உலக கோப்பையில் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளதால் வீரர்கள் மட்டுமின்றி ஆப்கான் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானை முதலில் பேட்டிங் ஆட சொல்ல, அந்த அணி 284 ரன்களை எடுத்தது, தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸின் 80 ரன்கள் மற்றும் இக்ராம் அலிகிலின் முக்கிய அரை சதமே (58 ரன்கள்) இதற்குக் காரணம். மேலும் முஜிப் உர் ரஹ்மான் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் தலா 28 ரன்களும், ரஷீத் கான் 23 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக அடில் ரசீத் 3 விக்கெட்டுகளும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். மேலும் ரீஸ் டாப்லி,  லிவிங்ஸ்டோன், ஜோ ரூட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி ஆப்கான் சுழலில் வெறும் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து அணியில் ஹாரி ப்ரூக் மட்டுமே சவாலான சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது 66 ரன்களுடன் ஒரு பாராட்டத்தக்க போராட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் டேவிட் மலான் 32 ரன்கள் எடுத்தார். ஆப்கான் அணியில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷித் கான் ஆகிய இருவரின் சுழற்பந்து வீச்சாளர்கள் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். மேலும் முகமது நபி 2 விக்கெட்டுகளும், பரூக்கி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இந்த போட்டியில் ஆஃப்-ஸ்பின்னர் முஜீப் 10 ஓவரில் 51 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதில் ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட்டின் மதிப்புமிக்க விக்கெட்டுகளும் அடங்கும். 22 வயதான அவர் பேட் மற்றும் பந்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் பேட்டிங்கிலும் கடைசியில் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் 284 ரன்களை எட்டியது.

இங்கிலாந்துக்கு எதிராக ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்ற பிறகு, அது வீரர்கள் மட்டுமின்றி மைதானத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் ஆரவாரத்தால் நிரம்பியது. அதேசமயம் போட்டி முடிந்ததும், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட ஒரு இளம் ரசிகர், முஜீப்பை சந்தித்தார். அது ஒரு சிறுவன் தான்.. சிறு குழந்தை கண்ணீருடன் இருந்தது, அந்த சிறுவன் ஆப்கான் வெற்றி பெற்றதால் ஆனந்த கண்ணீருடன் நட்சத்திர ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரைக் கட்டிப்பிடித்தார். குழந்தை அழுவதைப் பார்த்து, ஆப்கானிஸ்தான் டக்அவுட் உறுப்பினர் ஒருவர் விரைவாக ஒரு சாக்லேட்டைக் கொண்டு வந்து முஜீப் உர் ரஹ்மானிடம் கொடுத்தார், பின்னர் அவர் அதை இளம் ரசிகரிடம் கொடுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது..

உலக கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தானுக்கு இது 2வது வெற்றியாகும். ஆம்  2015 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் ஸ்காட்லாந்தை மட்டுமே வீழ்த்தியது. பின் 2019 உலகக் கோப்பையில் அனைத்து ஆட்டங்களிலும் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது. இந்நிலையில் தான் 2023 உலகக் கோப்பையில் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த பின் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. உலக கோப்பையில் கடந்த 17 ஆட்டங்களில் 16ல் தோல்வியடைந்த நிலையில், தற்போது இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளதால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.

முஜீப் தனது ஆட்டநாயகன் விருதை ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 4,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு அர்ப்பணித்தார். அவர் கூறியதாவது, “இந்த வெற்றி ஹெராட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய மக்களுக்கானது. இந்த முழு வெற்றி அவர்களுக்கானது. “உலகக் கோப்பையில் இங்கு வந்து சாம்பியனை வீழ்த்தியது மிகவும் பெருமையான தருணம். ஒட்டுமொத்த அணிக்கும் இது மிகப்பெரிய சாதனை. இந்த நாளுக்காக கடுமையாக உழைத்தோம். இவ்வளவு பெரிய அணியை வீழ்த்தினோம். பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்டர்களின் சிறப்பான ஆட்டம் இது” என்றார்.

மேலும் “ஒரு சுழற்பந்து வீச்சாளராக, பவர்பிளேயில் பந்து வீசுவது மிகவும் கடினம். உங்களிடம் இரண்டு பீல்டர்கள் மட்டுமே வெளியில் உள்ளனர். நான் வலையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். புதிய பந்தில் பந்துவீசுவது மற்றும் முடிந்தவரை சீரானதாக இருக்க முயற்சிப்பது. அதுதான் என்னை மிகவும் திறம்பட ஆக்கியது.

“நான் எப்பொழுதும் ஸ்டம்பை ஸ்டம்பிற்கு பந்துவீசவும், அதை எளிமையாக வைத்திருக்கவும் முயற்சிக்கிறேன். பிற்பகுதியில் பனி வந்து பங்கு வகிக்கப் போகிறது என்பதை அறிந்தோம். அதனால்தான் பவர்பிளேயில் எனக்கு பந்துவீச தருமாறு கேப்டனிடம் கூறினேன்” என்றார்.

மேலும் ரஷீத் கான், “ஆப்கானிஸ்தானில் மகிழ்ச்சியின் ஒரே ஆதாரம் கிரிக்கெட். சமீபத்தில், நிலநடுக்கம் ஏற்பட்டது, பலர் அனைத்தையும் இழந்தனர். இது அவர்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியைத் தரும். இந்த வெற்றி அவர்களுக்காக என்றார்..

https://twitter.com/Politics_2022_/status/1713612320478515202