கர்நாடகத்தில் பிரசித்தி பெற்ற மடத்தின் மடாதிபதியை ஆபாச வீடியோ காட்டி மிரட்டி, ரூ.1 கோடி பணம் பறிக்க முயன்ற இளம்பெண்ணைப் பெங்களூரு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கர்நாடகத்தின் முக்கிய மடம் ஒன்றின் மடாதிபதி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பலால் ‘ஹனி டிராப்’ (Honey Trap) முறையில் சிக்க வைக்கப்பட்டார். அந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அதே போன்றதொரு மிரட்டல் மடாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மடாதிபதி அண்மையில் அலுவல் காரணமாகப் பெங்களூரு வந்திருந்தார். அப்போது அவரைச் சந்தித்த ஸ்பூர்த்தி (25) என்ற இளம்பெண், மடாதிபதியின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி மிரட்டியுள்ளார். இதனை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் ரூ.1 கோடி தர வேண்டும் என அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
முதலில் பணம் தர மறுத்த மடாதிபதி, பின்னர் அந்தப் பெண்ணின் தொடர் மிரட்டலுக்குப் பயந்து முதற்கட்டமாக ரூ.4.5 லட்சத்தை வழங்கியுள்ளார். இருப்பினும், எஞ்சிய பணத்தைக் கேட்டு அந்த இளம்பெண் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மடாதிபதி, இது குறித்து பெங்களூரு போலீசில் புகார் அளித்தார்.
மடாதிபதியின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஸ்பூர்த்தியை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், மடாதிபதியை மிரட்டி பணம் பறிக்க முயன்றதை அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்.
இந்தச் சதியின் பின்னணியில் வேறு ஏதேனும் கும்பல் செயல்படுகிறதா? அல்லது ஏற்கனவே மடாதிபதியைச் சிக்க வைத்தவர்களுக்கும் இந்தப் பெண்ணிற்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
