சென்னை வேப்பேரி பகுதியில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மனைவி, அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த திலிப் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த காதல் மயக்கத்தில் இருந்த பெண், அந்த வாலிபர் கேட்ட போதெல்லாம் விலை உயர்ந்த நகைகளை வாரி வழங்கியுள்ளார். இவ்வாறு சிறுகச் சிறுக சுமார் 1 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள், மற்றும் 2.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் என பெரும் அளவிலான சொத்துக்களை அந்த வாலிபர் அபகரித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் ஒரு கட்டத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு அந்தப் பெண் தொடர்பைத் துண்டிக்க முயன்றபோது, திலிப் தனது சுயரூபத்தைக் காட்டியுள்ளார். தன்னிடம் உள்ள ஆபாசப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டித் தொடர்ந்து நகைகளைப் பறிக்க முயன்றதால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தவறான உறவினால் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
