காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தைபா அமைப்பின் துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி, இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் சமீபத்தில் உரையாற்றியுள்ளார். இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா தங்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஒப்புக்கொண்ட அவர், காஷ்மீர் விவகாரத்தில் இருந்து தங்கள் அமைப்பு ஒருபோதும் பின்வாங்காது என்று பிடிவாதமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அமிர்தசரஸ் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியப் பகுதிகள் பாகிஸ்தானுக்குச் சொந்தமானவை என்று எவ்வித ஆதாரமுமின்றி அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில், இந்தியா “நீர் பயங்கரவாதம்” செய்வதாக கசூரி குற்றம் சாட்டியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளால் பாகிஸ்தான் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியா திட்டமிட்டு நீரைத் திறந்துவிட்டு பாகிஸ்தானில் வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் தனது பேச்சில் அச்சம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவின் பலம் மற்றும் பதிலடி கொடுக்கும் திறனைக் கண்டு அஞ்சி, பாகிஸ்தான் தீவிரவாதிகள் இது போன்ற பொய்யான மற்றும் ஆக்ரோஷமான கருத்துகளைப் பரப்பி வருவதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.
