சேலம் மாவட்டத்தில் உள்ள சங்கரகிரி பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் பகுதி நேர வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது இவரது வாட்ஸ் அப்பிற்கு பகுதி நேர வேலை வாய்ப்பு தொடர்பாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு telegram மூலமாக அழைத்து பேசிய போது எதிரில் பேசிய அந்த நபர் ஆன்லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இது உண்மை என்று நம்பிய வாலிபர் எதிர்முனையில் பேசிய நபர் அனுப்பிய யூபிஐ ஐடிகளில் வெவ்வேறு வங்கிக் கணக்கில் இருந்து 9,33,710 ரூபாயை அனுப்பி உள்ளார். ஆனால் அதன் பிறகு அந்த நபரிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் இருந்துள்ளது.

பலமுறை அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் வசமாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பணம் அனுப்பப்பட்ட யூபிஐ வைத்து யாருடைய பெயருக்கு பணம் சென்றுள்ளது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.