தமிழ்நாட்டில் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் களிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் தவறாக அபராதம் விதிப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தன்ராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அதன் பிறகு தன்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் கனரக வாகனங்கள் உட்பட அனைத்து விதமான லாரிகள் என லட்சக்கணக்கான வாகனங்கள் இயங்குகிறது.

சாலையோரம் மற்றும் பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் உள்ள எண்களை மட்டும் வைத்து ஆன்லைன் அபராதம் விதிக்கிறார்கள். ஏற்கனவே பெட்ரோல், டீசல், இன்சூரன்ஸ் போன்ற பல பிரச்சனைகளால் தவித்து வரும் லாரி உரிமையாளர்களுக்கு அபராதம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. எனவே ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் தவறான முறையில் அபராதம் வசூலிக்கப்படுவதை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்  என்றும் தெரிவித்தார்.