சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மதுரை கேகே நகரை சேர்ந்த பொழிலன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் கல்லூரிகள் அதிகமாகி விட்ட நிலையில் கடந்த வருடத்தை காட்டிலும் பெண்கள் அதிக அளவில் உயர் கல்வி பயின்று வருகிறார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான கல்வி அறிவு இருக்கும் நிலையில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பல்வேறு விதமான சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரம் வைப்பதோடு அவற்றின் முறையாக அப்புறப்படுத்துவதற்கும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கலாமே என்று கூறினார்கள். அதோடு மனுதாரரிடம் தென் மாவட்டங்களில் மட்டும் குறிப்பிட்டது எதற்காக தமிழ்நாடு முழுவதும் என்று குறிப்பிட்டிருக்கலாமே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு மனுதாரர் கோர்ட்டின் எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் குறிப்பிட்டதாக கூறினார். இதனையடுத்து நீதிபதிகள் மனுதாரர் இந்த வழக்கில் யுஜிசி தலைவரையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் எனவும், வழக்கு குறித்து மனுதாரர் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறி வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.