உத்தரகண்டின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள பவுன்வாலா என்ற கிராமத்தில், மரத்தில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய ராஜ நாகப்பாம்பு கிராமப்புறத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை மீட்ட வனத்துறை அதிகாரிகள் மீது, பாம்பு நேரடியாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், டேராடூன் வனப் பிரிவின் ஜஜ்ரா மலைத் தொடரில் உள்ள பவுன்வாலா கிராமத்தில் நடைபெற்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. சுமார் 10 அடி நீளமுள்ள ராஜ நாகம், கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் சிக்கிக் கொண்ட நிலையில், கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து வனத்துறைக்கு தகவல் வழங்கினர்.

அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் பாம்பு மீட்புப் பணியாளர்கள், பாம்பை எச்சரிக்கையுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில், மரத்தில் சிக்கியிருந்த நாகம், கீழே இழுக்க முயன்ற அதிகாரியைக் திடீரென தாக்கிய வீடியோ தற்போது X  உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

காணொளியில், பாம்பு மீட்பாளர்கள் எவ்வாறு பாம்பின் மோசமான தாக்குதலை தவிர்த்து, திறமையாக அதனை கட்டுப்படுத்தி பிடிக்கிறார்கள் என்பதும் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் அந்த நாகத்தை மெருகூட்டப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி மீட்டனர்.

பின்னர், அந்த ராஜ நாகப்பாம்பு பாதுகாப்புடன் அதன் இயற்கை வாழ்விடத்திற்கு மாற்றப்பட்டதாகவும், உயிர்களுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்றும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்த காணொளி தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. வனத்துறை அதிகாரிகளின் துணிச்சலையும், மிகுந்த பொறுப்புணர்வுடனான செயல்பாடுகளையும் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், இப்படியான ஆபத்தான மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதற்கான விழிப்புணர்வும் எழுந்துள்ளது.