பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் புதிய விவாதம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனைச் சேர்ந்த ‘லீகல் யுகே’ என்ற எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் பெண் ஊழியர் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு, நெட்டிசன்கள் இடையே இருவேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது. அந்தப் பதிவின்படி, அந்நிறுவனத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மேலாளர் ஒருவர், ஆண் ஊழியர்களைத் தனியாகச் சந்தித்துப் பேசும் அதேவேளையில், பெண் ஊழியர்களைத் தனியாகச் சந்திக்கக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
பெண் ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தும்போது, அலுவலகக் கதவை முழுமையாகத் திறந்து வைக்க வேண்டும் அல்லது அறையில் மூன்றாம் நபர் ஒருவரை சாட்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற விசித்திரமான கொள்கையை அவர் பின்பற்றி வருகிறார். இதற்கு அந்த நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையும் ஒப்புதல் அளித்துள்ளது பெண் ஊழியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்த விதியால் பெண் ஊழியர்களின் தொழில்முறை வளர்ச்சி மற்றும் ரகசியத்தன்மை பாதிக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் குற்றம் சாட்டியுள்ளார். ஆண் ஊழியர்கள் தங்களின் சந்தேகங்களை உடனுக்குடன் மேலாளரின் அறைக்குச் சென்று தீர்த்துக் கொள்ளும் நிலையில், பெண்கள் மட்டும் முன்கூட்டியே அனுமதி பெற்று, தங்களுக்குத் துணையாக ஒரு ஆண் ஊழியரை அழைத்துச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதுகலை பட்டம் பெற்ற 40 வயது மதிக்கத்தக்கத் தன்னை, ஒரு குழந்தையைப் போல நடத்துவது போன்ற இந்தச் செயல் அப்பட்டமான பாலின பாகுபாடு என்றும் அவர் சாடியுள்ளார்.
— Legal Advice Yookay (@LegalYookay) May 28, 2026
இப்புகார் குறித்து இணையத்தில் நெட்டிசன்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். ஒரு தரப்பினர், “பெண்கள் தரும் பொய் புகார்களில் இருந்தும், பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ள இந்த மேலாளர் எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது” என அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். மற்றொரு தரப்பினரோ, “இது பெண்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் செயல்; தகுதியுள்ள பெண்களுக்கு சமமான மற்றும் சுதந்திரமான வேலைச் சூழலை இது மறுக்கிறது” என மேலாளரின் செயலுக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
