சீனாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ரோடு டு யுஎஃப்சி’ (Road to UFC – Season 5) தற்காப்புக் கலைப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பூஜா தோமரை, சீனாவின் ஷி மிங் முதல் சுற்றிலேயே வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். ஸ்ட்ராவெயிட் பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில், இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பூஜா தோமர் தோல்வியடைந்தது ஏமாற்றத்தை அளித்தாலும், போட்டிக்குப் பிந்தைய நேர்காணலில் சீன வீராங்கனை ஷி மிங் பேசிய வார்த்தைகள் ஒட்டுமொத்த அரங்கையும், இணையதளங்களையும் நெகிழச் செய்துள்ளது.
தற்காப்புக் கலை வீராங்கனையாக மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையில் ஒரு பொது மருத்துவப் பிரிவின் மருத்துவராகவும் பணியாற்றி வரும் ஷி மிங், தனது வெற்றிக்கு இந்தியத் திரைப்படமான ‘தங்கல்’ மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆகியோர் மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்ததாக உருக்கமாகத் தெரிவித்தார்.
From Dangal inspiration to her own Dangal 🥋🔥
Chinese UFC fighter Shi Ming shares her love for Aamir Khan and the film 🎬 #SonySportsNetwork #UFC #RTU pic.twitter.com/8E8Qwk5eCL
— Sony Sports Network (@SonySportsNetwk) May 29, 2026
கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி, சுமார் ₹1,295 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த ‘தங்கல்’ திரைப்படம், அங்குள்ள விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஷி மிங்கின் பேச்சு மீண்டும் நிரூபித்துள்ளது. தனது உணர்ச்சிகரமான உரையில், “மக்கள் என் மீது நம்பிக்கை வைப்பது எனக்கு மிகவும் முக்கியம். எனக்கு இந்திய நடிகர் அமீர்கானையும், அவருடைய ‘தங்கல்’ படத்தையும் மிகவும் பிடிக்கும். அது என் இதயத்தைத் தொட்ட படம்.
என்னைப்போன்ற ஒரு பெண் மருத்துவர் எப்படி தற்காப்புக் கலைக்குள் வந்தார் என்பது குறித்து யாராவது ‘தங்கல் 2’ என்ற படத்தை எடுத்தால் நன்றாக இருக்கும்” என்று அவர் நகைச்சுவையுடன் விருப்பம் தெரிவித்தார். தடைகளைத் தகர்த்து விளையாட்டுத் துறையில் சாதிக்கும் பெண்களின் கதையை மையமாகக் கொண்ட ‘தங்கல்’ திரைப்படம், தற்போதும் எல்லையைக் கடந்து சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளித்து வருவது இந்தியத் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
