அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா கிடைக்காததால் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த பிரதீக் கார்கி என்ற இளைஞர், இன்று தனது விடாமுயற்சியால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.2.8 கோடி (300,000 டாலர்) சம்பளத்தில் பணிபுரிந்து வந்த பிரதீக்கிற்கு, விசா லாட்டரி முறையில் தொடர்ந்து 4 முறை விசா நிராகரிக்கப்பட்டது.
இதனால் அமெரிக்காவை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, மனமுடைந்து போகாமல் தனது மனைவியின் ஆதரவோடு ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். 27 வயதிலேயே கோடிக்கணக்கான சம்பளம் தந்த கூகுள் வேலையைத் தைரியமாக ராஜினாமா செய்த பிரதீக், சாப் பிரான்சிஸ்கோவில் ‘ஆந்த்ரோமைண்ட்’ (Anthromind) என்ற தனது சொந்த ஏஐ (AI) ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கினார்.
குறுகிய காலத்திலேயே முதலீட்டாளர்களை ஈர்த்து தனது நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திய அவர், திறமையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய ‘ஓ-1’ (O-1) விசாவைப் பெற்றார். அதன் தொடர்ச்சியாக, தற்போது அவரும் அவரது மனைவியும் அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமைகான ‘கிரீன் கார்டு’ (Green Card) பெற்று சாதனை படைத்துள்ளனர்.
விசா நிராகரிப்பால் நாட்டை விட்டு வெளியேறும் சூழலில் இருந்த இருவர், இன்று ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை உருவாக்கி கிரீன் கார்டையும் வென்று காட்டியுள்ள இந்த ஊக்கமளிக்கும் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
