
சென்னையில் நடந்த ஒரு வினோத சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சென்னையில் வாழும் நேபாளத்தைச் சேர்ந்த கார் சுத்தம் செய்யும் தொழிலாளியின் மனைவிக்கு திடீரென “பேய் பிடித்துள்ளது” என்றும், அதற்குப் பிறகு தமிழ் மொழியைத் தாய்மொழிபோல் சரளமாக பேச தொடங்கியுள்ளார் என்றும் அவர் கூறியதிலிருந்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப்பற்றி சமூக வலைதளமான X தளத்தில் நாராயணன் என்ற பயனர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் என்னுடைய காரை துடைக்கும் நபர் ஒருவாரம் விடுப்பு கேட்டதையடுத்து, நான் அதற்கான காரணத்தை கேட்டேன். அப்போது தனது மனைவிக்கு பேய் பிடித்துள்ளதாகவும், கடந்த 6 மாதங்களாக தமிழ் மொழியை சரளமாக பேசத் தொடங்கியுள்ளார் எனவும் அந்த நேபாள நபர் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததால் அந்த பெண்ணை அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று பல்வேறு சடங்குகள் நடத்தப்பட்டதாகவும், எந்தவிதமான மாற்றமும் ஏற்படாததால் தற்போது தனது மனைவியுடன் நேபாளத்திற்கு திரும்புகிறார் எனவும் அந்த நபர் கூறியதாகவும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிலர் அந்த பெண்ணுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருக்கலாம் என்று கூறினாலும் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு பெண் திடீரென சரளமாக தமிழில் பேசுவது என்பது ஆச்சரியமான ஒன்றுதான் என்றும் கூறி வருகிறார்கள்.