தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கேட்டு காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், திமுக – காங்கிரஸ் இடையே மோதல் முற்றியுள்ளது. மதுரையில் பேசிய திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி, “பூத் கமிட்டி அமைக்கக்கூட ஆள் இல்லாத காங்கிரஸிற்கு எதற்கு சீட்?” என விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் தொண்டர்களின் தன்மானம் முக்கியம் என்றும், தங்களை இழிவுபடுத்துபவர்களை ஒருபோதும் சும்மா விடமாட்டோம் என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து திமுக மேலிடத்திடம் காங்கிரஸ் நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். “இந்தியா கூட்டணி என்பது நாடாளுமன்றத் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது” என்று மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டிருப்பது, வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மாறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஒருபுறம் தொகுதிப் பங்கீடு, மறுபுறம் வார்த்தைப் போர் என இரு கட்சிகளுக்கும் இடையே நிலவும் இந்த மோதல், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
