தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வரலாற்றுச் வெற்றி பெற்று, தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் தலைமையில், த.வெ.க ஆட்சியின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நாளை (ஜூன் 5, வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் த.வெ.க பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து, தனக்கு ஆதரவளித்த கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க), மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்) ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சரவையில் உரிய இடங்களை வழங்கி, ஆட்சியில் பங்களிப்பை உறுதி செய்தார் முதல்வர் விஜய்.
இதன் மூலம், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக கூட்டணி ஆட்சி முறை முறைப்படி அமையப் பெற்றுள்ளது. ஆட்சியமைக்கப்பட்ட பிறகு, அனைத்துத் துறைகளுக்கான அமைச்சர்கள் விவரம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் தலைமையிலான இந்த முதல் அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.
த.வெ.க தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அதிகாரப்பூர்வமாக நடைபெறும் முதல் கேபினட் மீட்டிங் இது என்பதால், ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமும் இந்த கூட்டத்தை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. புதிய அரசின் முக்கிய திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த பல அதிரடி முடிவுகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இந்த கூட்டத்திற்குப் பின் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
