செவ்வாய் கிரகத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற விஞ்ஞானிகள் கற்பனைக்கு தற்போது உறுதியான ஆதாரம் கிடைத்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

நாசா கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி செவ்வாய் கிரகத்துக்கான ‘பெர்சவரன்ஸ்’ (Perseverance) என்ற ரோவரை விண்வெளிக்கு அனுப்பியது. 2021-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி, அந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் ‘ஜெசெரோ பள்ளத்தாக்கு’ (Jezero Crater) எனப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்த பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த காலத்தில் ஆறுகள், நீர்நிலைகள் இருந்திருக்க வாய்ப்பு இருப்பதால், உயிர் வாழ்வு தொடர்பான ஆதாரங்களை தேடுவதற்காக இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் பின், பெர்சவரன்ஸ் ரோவர் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பாறைகளை ஆய்வு செய்து புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

சமீபத்தில் இந்த ரோவர் சேகரித்த பாறை மாதிரிகள் குறித்து விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், அந்த பாறைகள் ஜெசெரோ பள்ளத்தாக்கில் ஓடிய ஆற்றின் அடிப்பகுதியில் இருந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் காணப்படும் ரசாயனக் கூறுகள், செவ்வாய் கிரகத்தில் நுண்ணியிர்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கியமான சான்றுகளாக இருப்பதைக் கூறுகிறது நாசா.

இது குறித்து நாசாவின் பொறுப்புநிர்வாகத் தலைவர் ஷான் டப்பி கூறியதாவது:  “தற்போதைய கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகத்தில் கடந்த காலத்தில் உயிர்கள் இருந்ததற்கான புரட்சிகரமான ஆதாரமாக அமைகிறது. இது நம்முடைய விண்வெளி ஆய்வை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும்” என்றார்.

முன்னதாக, 1965-ம் ஆண்டு ‘மேரினர்-4’ விண்கலம் செவ்வாய் கிரகத்தை மிக அருகில் சென்றது முதல், 1976-ம் ஆண்டு ‘வைக்கிங்-1’ லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது வரை பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், மண் மற்றும் வளிமண்டலக் கூறுகளின் அடிப்படையில், செவ்வாயில் ஒருகாலத்தில் தண்ணீர் இருந்திருக்கலாம் என்றும், அதற்கமைய உயிர்கள் இருந்திருக்க வாய்ப்பு என்றும் கூறப்பட்டது. தற்போது, பெர்சவரன்ஸ் ரோவர் கொண்டு கிடைத்துள்ள பாறை மாதிரி மூலம் அந்த வாய்ப்பு, நிலையான ஆதாரத்தில் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.