திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி, லாரி டிரைவர். அவரின் மனைவி சரஸ்வதி (32), இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதுடன், இரு மகன்களும் உள்ளனர். ஆனால், சரஸ்வதி பல ஆண்களுடன் செல்போனில் பேசுவதாகக் கூறி கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு முன் கணவரை விட்டு பிரிந்து, தனியாக கொளத்தூரில் வீடு வாடகைக்கு எடுத்துக்கொண்டு வசித்து வந்தார்.
இந்தநிலையில், கடந்த 21ம் தேதி சரஸ்வதி அவரது வீட்டில் அழுகிய நிலையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையின் போது, அவருடன் ஒரு ஆண் தங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் அவரின் நகைகள் மற்றும் செல்போன் காணாமல் போயிருந்ததை அடுத்து, அவரது கள்ளக்காதலனே கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து சோதனை நடவடிக்கையில், சென்னை அண்ணா நகரில் சலவைக்கடை நடத்தி வந்த மத்தியப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த முகமது அன்சாரி (37) என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது அவர், “சரஸ்வதியுடன் கடந்த 7 மாதங்களாக தொடர்பில் இருந்தேன். இருவரும் அண்மையில் கணவன்-மனைவியைப் போன்று ஒரே வீட்டில் வாழ்ந்தோம். ஆனால், அவளது பல ஆண்களுடன் இருந்த தொடர்புகள் காரணமாக கோபத்தில் அவர் மீது பழிவாங்க நினைத்தேன். மது அருந்திய பின்னர் போதையில் இருந்த சரஸ்வதியின் வயிற்றிலும், தலையிலும் மிதித்து கொலை செய்தேன்” என வாக்குமூலம் அளித்தார்.
அதன் பின், சரஸ்வதி அணிந்திருந்த மூன்று பவுன் நகையும், செல்போனையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தார். தனது சொந்த ஊரான கான்பூருக்கு செல்ல முயன்ற அவரை, சென்னை போலீசார் சிறப்பாக கண்காணித்து பிடித்தனர். இந்த கொடூரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியையும், மக்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
