திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள தண்டப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன். அவரது மகன் ஸ்ரீதர் (வயது 22), செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. படிப்பை முடித்தவர். அரசு வேலைக்கான தேர்வுகளுக்கு தயாராக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் TNPSC குரூப் 4 தேர்வுக்காக பயிற்சி பெற்றுவந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குரூப் 4 தேர்வை எழுதினார்.
தேர்வுக்குப் பிறகு வீட்டுக்கு வந்த ஸ்ரீதர், தன்னால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை என நினைத்து மன உளைச்சலுடன் இருந்து வந்தார். பெற்றோருக்கு தெரியாமல் உள்ளுக்குள் குமுறிய அவர், தேர்வு தோல்விக்கு மிகுந்த மன அழுத்தத்தில் தொடர்ந்து இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த இரவு பெற்றோர் தூங்கிய பின்பு, அதிகாலை சுமார் 2 மணியளவில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த மோரணம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட கிராமம் மற்றும் மாணவர்களிடம் மிகுந்த சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் தேர்வுப் பணிகளில் மன அழுத்தமின்றி செயல்பட, பெற்றோர் மற்றும் சமூக அமைப்புகள் உரிய வழிகாட்டலையும் ஆதரவும் வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தல்.
