நைஜீரியாவின் டெல்டா மாநிலத்தில் உள்ள ஓசோரோ பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘அலுவே-டோ’ (Alue-Do) என்ற பாரம்பரிய திருவிழாவின் போது, கும்பலாகச் சேர்ந்த ஆண்கள் பெண்களை வீதியில் விரட்டிப் பிடித்து, அவர்களின் ஆடைகளைக் கிழித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சி வீடியோக்கள் வெளியாகி உலக அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோக்களில், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த வீதிகளில் ஒரு கும்பல் பெண்களைத் துரத்துவதைக் காண முடிகிறது. பெண்களைச் சூழ்ந்துகொள்ளும் அந்த கும்பல், அவர்களின் ஆடைகளை வலுக்கட்டாயமாக உருவி எறிகிறது. அந்தப் பெண்கள் கதறி அழும்போதும், அங்குள்ளவர்கள் அவர்களைக் காப்பாற்றாமல் கேலி செய்வதும், வீடியோ எடுப்பதும் காண்போரை பதைபதைக்க வைக்கிறது.

இந்தக் கொடூரத்தில் பாதிக்கப்பட்ட ‘எஸியுகோ ஐஜியோமா ரோஸ்மேரி’ என்ற மாணவி கூறுகையில், “நான் அந்த இடத்திற்கு வந்திறங்கியதும், ‘அதைப் பிடி.. அது ஒரு பெண்’ என கத்தியபடி ஒரு கும்பல் தேனீக்களைப் போல என் மீது பாய்ந்தது. எனது ஆடைகளை உருவி எறிந்தனர். மார்பகங்களை இழுத்தும், உடல் முழுதும் தொட்டும் சித்ரவதை செய்தனர். நான் உதவிக்காகக் கத்தினேன்,” எனத் தெரிவித்தார். ஒரு வழியாக அங்கிருந்தவர் ஒருவரால் மீட்கப்பட்ட அவர், தற்போது வரை அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்த்து வருகிறார்.

அருகிலுள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல மாணவிகள் இவ்வாறு தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் நைஜீரியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்திய நிலையில், அந்நாட்டு போலீஸார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

தற்போது வரை அந்த ஊர் தலைவர் மற்றும் வீடியோக்களில் அடையாளம் காணப்பட்ட இளைஞர்கள் உட்பட 12-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது வெறும் கலாச்சாரம் சார்ந்த விஷயம் அல்ல, இது அப்பட்டமான பாலியல் வன்கொடுமை மற்றும் பொதுவெளியில் பெண்களை அவமானப்படுத்தும் செயல் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் பிரைட் எடாஃபே தெரிவித்துள்ளார்.