நெதர்லாந்து நாட்டின் இளவரசிகள் இருவரைக் கொலை செய்யத் தீட்டப்பட்ட பயங்கர சதித்திட்டத்தை அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இது தொடர்பாக ஹிட்லரின் நாஜி சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது நெதர்லாந்து இளவரசி காதரினா அமாலியா (22) மற்றும் அவரது சகோதரி இளவரசி அலெக்ஸியா (20) ஆகியோரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக கடந்த பிப்ரவரி மாதம் 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய சோதனையில் இரண்டு கோடாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கோடாரியில் இளவரசி ‘அலெக்ஸியா’-வின் பெயர், இஸ்ரேலிய உளவு அமைப்பான ‘மொசாட்’ (Mossad) மற்றும் நாஜிக்களின் முழக்கமான ‘Sieg Heil’ போன்ற சொற்கள் செதுக்கப்பட்டிருந்தது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், இளவரசிகள் இருவரின் பெயர்களையும் எழுதி, அதன் அருகே ‘ரத்தக் குளியல்’ என்ற வாசகத்தையும் அந்த நபர் தனது கையெழுத்துக் குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் நாளை (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் இந்தச் சதியின் பின்னணியில் வேறு ஏதேனும் பயங்கரவாதக் கும்பல்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விரிவான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பல்வேறு குற்றக் கும்பல்களின் அச்சுறுத்தல் காரணமாக இளவரசி அலெக்ஸியா சுமார் ஒரு ஆண்டு காலம் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் ரகசியமாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவர் நாடு திரும்பிய நிலையில் இந்தச் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது நெதர்லாந்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
