உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில், கட்டப்பட்டு வரும் ஒரு வணிக வளாகத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பீகாரைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களின் மகளான அந்தச் சிறுமி, வெள்ளிக்கிழமை மாலை விளையாடச் சென்றபோது காணாமல் போயுள்ளார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, சனிக்கிழமை அதிகாலை வணிக வளாகத்தின் அடித்தளத்தில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. குற்றவாளிகள் அச்சிறுமியை வணிக வளாகத்தின் மூன்றாவது மாடிக்குக் கூட்டிச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்தபின், இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளனர்.
இதனால் நிலைதடுமாறிய சிறுமி பாதுகாப்புத் தடுப்புகள் ஏதுமற்ற லிஃப்ட் துவாரத்தின் வழியே மூன்றாவது மாடியிலிருந்து அடித்தளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், சிறுமியைத் தங்களோடு அழைத்துச் சென்ற இரண்டு நபர்களைக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த அதிர்ச்சியூட்டும் வழக்கில் தொடர்புடைய ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர், மேலும் ஒரு சிறுவன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான். குற்றவாளிகள் இருவரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் வசிக்கும் அதே தற்காலிகக் குடியிருப்பில் வசிப்பவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்ஸோ சட்டப் பிரிவுகளின்கீழ் கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
