இசை உலகின் பேரரசியும், லட்சக்கணக்கான பாடல்கள் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளையடித்த தேன் குரல் தேவதையுமான தென்றல் இசைப் பாடகி எஸ்.ஜானகி அவர்கள் காலமானார் என்ற அதிர்ச்சித் செய்தி வெளியாகி ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் தமிழ் சினிமாவும், ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ​பாடகி எஸ்.ஜானகி அவர்களின் மறைவுக்கு, பிரபல இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் தனது வழக்கமான அடுக்குமொழி பாணியில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், “நெஞ்சில் ஒரு ராகம்.. தந்துவிட்டாரே நீங்காத ஒரு சோகம்! நெஞ்சம் பாடும் புதிய ராகம், தாளம் உன்னை தேடுது, நினைவில் நின்ற நெஞ்சில் ஒரு ராகம்.. தந்துவிட்டாரே நீங்காத ஒரு சோகம். ‘வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர’ என்று என் மெட்டிற்கு மெருகேற்றியவர், பாட்டுக்கு அமுதூட்டியவர்” எனக் கண்ணீர் மல்கக் கூறி தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார். டி.ராஜேந்தரின் இந்த உருக்கமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.