மிகக் குறைந்த வயதிலேயே இந்தியாவின் மிகக் கடினமான தேர்வுகளை வென்று சாதனை படைத்தவர் ரோமன் சைனி. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தனது 16வது வயதிலேயே புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, 21 வயதில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்து மருத்துவரானார்.

மேலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூனியர் ரெசிடென்ட் டாக்டராகப் பணியாற்றியபோது, ஏழை எளிய மக்களின் அவல நிலையைக் கண்டு சமூகத்திற்குப் பெரிய அளவில் சேவை செய்ய விரும்பினார். இதற்காக சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகி, தனது 22வது வயதிலேயே, முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 18வது ரேங்க் பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக சாதனை படைத்தார்.

இதனைத்தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் உதவி ஆட்சியராகவும் பொறுப்பேற்று திறம்பட பணியாற்றினார். ஆனால், அவரது லட்சியம் இத்துடன் நின்றுவிடவில்லை. இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தரமான கல்வி மிகக் குறைந்த செலவில், எளிதாகக் கிடைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இந்த உன்னத நோக்கத்திற்காக, 2015ஆம் ஆண்டு தனது மதிப்புமிக்க ஐஏஎஸ் பதவியைத் துறக்கும் துணிச்சலான முடிவை எடுத்தார்.

இதனால் தனது நண்பர்களான கௌரவ் முஞ்சல் மற்றும் ஹேமேஷ் சிங் ஆகியோருடன் இணைந்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்யும் ‘அன்அகாடமி’ என்ற ஆன்லைன் கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். ஒரு யூடியூப் சேனலாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தளம், இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கிறது.

இந்நிலையில் அரசு வேலையே வாழ்வின் லட்சியம் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில், அதைத் தாண்டி சாதிக்கத் துடித்த ரோமன் சைனியின் கதை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு மாபெரும் உத்வேகம் ஆகும்.