அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள காப் கவுண்டியில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பத் தலைவரான ஷீத்தல் ரிசீன் குடும்பத் தகராறு காரணமாக அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு லாரல் கிரீக் ட்ரெயில் பகுதியில் உள்ள இவர்களது வீட்டில் நிகழ்ந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில், தம்பதியரின் 23 வயது மகன் ஜேசன் ரிசீனும் படுகாயமடைந்தார். துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் வீட்டை விட்டு ஓடிவந்து அண்டை வீட்டாரின் உதவியை நாடிய ஜேசன், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஷீத்தல் ரிசீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதி செய்ததுடன், அவரது கணவரான கிர்க் பி. ரிசீனை எவ்வித எதிர்ப்புமின்றி உடனடியாகக் கைது செய்தனர். கொல்லப்பட்ட ஷீத்தல் ரிசீன், உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் மற்றும் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் மூத்த பொறியியல் மேலாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர் ஆவார்.

மேலும் ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் கணினி அறிவியல் பட்டம் பெற்ற இவர், பல முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்ததோடு, தொழில்நுட்பத் துறையில் பெண்களின் முன்னேற்றத்திற்கான சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

தற்போது இக்கொலைச் சம்பவம் தொடர்பாக கிர்க் பி. ரிசீன் மீது கொலை மற்றும் ஆயுதங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜாமீன் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இக்கொடூரமான துப்பாக்கிச் சூட்டிற்கான துல்லியமான பின்னணி குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.