காதலி திடீரென உயிரிழந்த செய்தியை கேட்டு மனவேதனை அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம், கோவை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமியின் மகன் தனுஷ் (வயது 21), அங்குள்ள ஒரு கறிக்கோழி கடையில் வேலை செய்து வந்தார். இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த பிளஸ்–2 மாணவியுடன் தனுஷுக்கு நட்பு ஏற்பட்டது. இது தொடர்ந்து காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி செல்போனில் உரையாடி வந்தனர்.

இந்தநிலையில், ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக மாணவி, தனது சொந்த ஊரான கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரிக்கு சென்றார். அங்கு உள்ள ஆற்றில் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

மாணவி வெளியூருக்குச் சென்றபோதும், தொடர்ந்து தனுஷுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக எந்த தகவலும் வராததையடுத்து சந்தேகமடைந்த தனுஷ், அவரின் கைப்பேசிக்கு அழைத்துள்ளார். அப்போதுதான் மாணவி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தி தனுஷுக்குத் தெரிய வந்தது.

இந்த செய்தியை கேட்ட தனுஷ் அதிர்ச்சியடைந்துள்ளார். “அவளில்லாத உலகில் எப்படி வாழ முடியும்?” என நண்பர்களிடம் கதறி அழுதுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர், வாழ்க்கையில் விரக்தியடைந்த தனுஷ், விஷம் வாங்கி குடித்து, வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டில் திடீரென அவருக்கு வாந்தி ஏற்பட்டதை பார்த்த பெற்றோர் விசாரித்தபோது, விஷம் குடித்ததாக கூறியுள்ளார்.

உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், தனுஷ் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்
காதலி மரணத்தை தாங்க முடியாமல் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது, அந்த பகுதியிலும் சமூக வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.