​சென்னையில் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டு ஊடகங்கள் மீது தனது கடுமையான அதிருப்தியையும் பாய்ச்சலையும் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள முதன்மை ஊடகங்கள் தங்களை ஒரு தீண்டத்தகாதவர்களாகவே பார்க்கின்றன என்று அவர் மேடையிலேயே பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

மற்ற அரசியல் தலைவர்கள் போவதையும், வருவதையும், திரும்புவதையும் கூடப் பெரிய செய்தியாகக் காட்டும் ஊடகங்கள், தங்களது மக்கள் பணிகளையும் போராட்டங்களையும் அறவே திரும்பிப் பார்ப்பதே இல்லை என்று சீமான் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார். ​ஊடகங்கள் தங்களைப் புறக்கணிப்பதால் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று முழங்கிய சீமான், “நீ என்னை ஒதுக்கினால் என்ன? நான் உன்னைத் தீண்டிக் கூடப் பார்க்க மாட்டேன்” என்று ஊடகங்களுக்கு நேரடி சவால் விடுத்துள்ளார்.

ஊடகங்கள் செய்தி போட்டால்தான் தங்களது கட்சி வளர வேண்டும் என்ற அவசியம் தங்களுக்கு இல்லை என்றும், தாங்கள் செய்ய வந்தது செய்தி அரசியலோ அல்லது விளம்பர அரசியலோ அல்ல என்றும் குறிப்பிட்டார். நாம் தமிழர் கட்சி செய்வது முழுக்க முழுக்க மக்கள் அரசியல், சேவை அரசியல் மற்றும் செயல் அரசியல் என்று குறிப்பிட்ட அவர், தங்களை வளரவிடக் கூடாது என்று ஊடகங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நினைக்கிறதோ, அதை உடைத்தெறிந்து தாங்கள் வென்றே தீருவோம் என்று சீமான் பேசியுள்ளது ஊடக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.