சென்னை மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் தினமும் வேலைக்கு பேருந்தில் சென்று வருவார். வழக்கம்போல இவர் கடந்த 2-ம் தேதி வேலைக்கு செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பேருந்து வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருக்கும்போது அதே பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பயந்து போன அந்த இளம் பெண் என்ன செய்வது என்று தெரியாமல் உடனடியாக அவரது நண்பருக்கு போன் செய்துள்ளார்.
அப்போது அவர் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி போலீசில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளார். அதன் பேரில் அவர் பெண் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு அழைத்து பேருந்தில் தன்னிடம் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளார். அந்தப் பெண்ணின் புகாரின்படி வேளச்சேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
எனவே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஐந்து நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பெயர் ராஜேஷ். அவர் கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
