அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ-யின் (FBI) முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் III (81), உடல்நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்து கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவின் முதன்மையான விசாரணை அமைப்பாக விளங்கும் எப்.பி.ஐ-யில் நீண்ட காலம் இயக்குநராகப் பணியாற்றிய பெருமை முல்லருக்கு உண்டு. கடந்த 2001-ஆம் ஆண்டு இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, வெறும் விசாரணை அமைப்பாக இருந்த எப்.பி.ஐ-யை, நவீனத் தொழில்நுட்பங்களுடன் கூடிய வலிமையான பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவாக மாற்றியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.
கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, டொனால்டு டிரம்பின் வெற்றிக்கு ரஷ்யா உதவியதாக எழுந்த புகார்கள் குறித்து ராபர்ட் முல்லர் தலைமையிலான குழுவே விரிவான விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் காரணமாக டிரம்ப் நிர்வாகத்திற்கும் முல்லருக்கும் இடையே நீண்டகாலமாகப் பகை நிலவி வந்தது. டிரம்ப் பலமுறை முல்லரை பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், முல்லரின் மறைவு குறித்து டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாவது: “ராபர்ட் முல்லர் சற்று நேரத்திற்கு முன்புதான் இறந்தார். அவர் இறந்துவிட்டார் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இனி அவரால் அப்பாவி மக்களைக் காயப்படுத்த முடியாது”
என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒரு நாட்டின் உயரிய பொறுப்பில் இருந்த அதிகாரியின் மறைவு குறித்து முன்னாள் அதிபர் ஒருவர் இவ்வாறு பதிவிட்டிருப்பது அமெரிக்க அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் இந்தப் பதிவு குறித்து எப்.பி.ஐ. தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
