தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “முதலமைச்சராகப் பதவி ஏற்றிருக்கும் அன்பு தம்பி விஜய் அவர்களுக்கு, கேப்டன் விஜயகாந்த் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என உருக்கமாகக் கூறினார். கேப்டன் விஜயகாந்த் மற்றும் விஜய் இடையே இருந்த அதே பாசமான உறவை நினைவுபடுத்தும் வகையில் அமைந்த இந்த வாழ்த்து, தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே ‘தமிழக அரசின் கஜானாவில் பணம் இல்லை’ என முதல்வர் விஜய் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் விஜய்க்கு ஆதரவாகப் பதிலளித்த பிரேமலதா, “அவர் ஏன் அதைச் சொன்னார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். நேற்று பதவி ஏற்ற அவருக்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். இப்போதே அவசரம் காட்டக் கூடாது” எனத் தெரிவித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
