சொத்துக்காகவும் பணத்திற்காகவும் மோதல்கள் நடப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அமெரிக்காவில் உயிரிழந்த ஒரு நபரின் இறுதிச்சடங்கின்போது, அவரது காதலிகள் இருவர் ஒருவரையொருவர் தாக்கி மோதிக்கொண்ட சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது அமெரிக்காவில் உயிரிழந்த ஒரு நபருக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அந்த நபருக்கு அஞ்சலி செலுத்த வந்த இரண்டு பெண்களுக்கு, அதுவரை ஒரு ரகசியம் தெரியாமல் இருந்தது. அதாவது, தாங்கள் இருவருமே ஒரே நபரைத் தான் காதலித்து வந்தோம் என்பது சவப்பெட்டி அருகே நேருக்கு நேர் சந்தித்தபோது தான் அவர்களுக்குத் தெரியவந்தது.
துக்கத்தில் முடிந்திருக்க வேண்டிய அந்தச் சடங்கு, அடுத்த சில நிமிடங்களில் போர்க்களமாக மாறியது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இரு பெண்களும் சவப்பெட்டியை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டு ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொள்கின்றனர். “அவர் என்னுடையவர்” என்று ஒரு பெண் உரிமை கொண்டாட, மற்றொரு பெண் அவரைத் தள்ளிவிட்டதில் தகராறு முற்றியது.
இந்த மோதல், சிறிது நேரத்தில் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கும் நிலைக்குச் சென்றது. அஞ்சலி செலுத்த கண்ணீருடன் நின்றிருந்த உறவினர்கள், செய்வதறியாது திகைத்துப்போய் அவர்களை விலக்க முயன்றனர். ஆனால், கோபத்தில் இருந்த அந்தப் பெண்கள் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.
இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பார்த்த பலரும் விதவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “பாவம், அந்த நபர் இறந்த பிறகும் நிம்மதியாகப் போக முடியவில்லை” என்றும், “துரோகத்தின் முடிவு இப்படித்தான் பகிரங்கமான அவமானத்தில் முடியும்” என்றும் இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர். ஒருபுறம் இந்தச் சம்பவம் வேடிக்கையாகத் தெரிந்தாலும், உறவுகளில் நேர்மை எவ்வளவு முக்கியம் என்பதையும், போலி உறவுகளின் முடிவு இவ்வளவு கசப்பாக இருக்கும் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துவதாகச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மறைந்த நபருக்கு மரியாதை செலுத்த வேண்டிய இடத்தில், கண்ணியத்தை மறந்து இரு பெண்கள் பொதுவெளியில் மோதிக்கொண்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
