ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி ஒரு பெரிய விவாதம் கிளம்பியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை அணியில் இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காத அர்ஜுனுக்கு, லக்னோ அணியிலாவது ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், இந்திய வீரர் ஆர். அஸ்வின் தனது கருத்தில், லக்னோ அணியில் ஏற்கனவே தகுதியான வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் இருப்பதால், அர்ஜுன் டெண்டுல்கர் இந்த சீசன் முழுவதுமே பெஞ்சில் உட்காரத்தான் வாய்ப்பு அதிகம் என்று அதிரடியாகத் தெரிவித்தார். அஸ்வினின் இந்த கருத்தைக் கேட்டு கடும் கோபமடைந்த யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங், அஸ்வின் பேசுவது முட்டாள்தனம் என்று சாடியுள்ளார்.
“அர்ஜுன் ஒரு சிறந்த பேட்டர், அவரைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை” என்று கூறிய அவர், அர்ஜுன் டெண்டுல்கர் தன்னிடம் ஆறு மாதம் பயிற்சி பெற்றால் உலகத்தையே மிரட்டும் அளவுக்கு உருவெடுப்பார் என்றும், அப்படி நடக்கவில்லை என்றால் தனது தாடியையே எடுத்துவிடுவதாகவும் பகிரங்கமாகச் சவால் விட்டுள்ளார். அர்ஜுன் டெண்டுல்கரைச் சுற்றி அஸ்வின் மற்றும் யோகராஜ் சிங் இடையே வெடித்துள்ள இந்த கருத்து மோதல் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
