2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பிறகு, இங்கிலாந்து அணி உடனடியாக நாடு திரும்பிய நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் இந்தியாவில் சிக்கிக்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக வணிக ரீதியான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் இங்கிலாந்து அணிக்கு மட்டும் முன்னுரிமை அளித்து ஐசிசி சிறப்பு விமானம் மூலம் அவர்களை அனுப்பி வைத்ததாகவும், அதே சமயம் தங்களை பல நாட்களாக கொல்கத்தாவில் காத்திருக்க வைத்துள்ளதாகவும் தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் மற்றும் மேற்கிந்திய தீவுகள் பயிற்சியாளர் டேரன் சமி ஆகியோர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஐசிசி ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. “இங்கிலாந்து அணி அரையிறுதியில் தோற்ற சில நாட்களிலேயே கிளம்பிவிட்டது, ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பே வெளியேறிய நாங்கள் இன்னும் இருட்டில் வைக்கப்பட்டுள்ளோம்” என்று டி காக் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனும் இந்த பாரபட்சமான அணுகுமுறையை விமர்சித்துள்ளார். தற்போது ஐசிசி தலையிட்டு, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்காக ஒரு கூட்டு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த விமானம் முதலில் ஜோகன்னஸ்பர்க் சென்று, பின்னர் கரீபியன் நாடுகளுக்கு வீரர்களை அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.