வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிக மோசமாக இழந்ததைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் அந்த அணி கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

தோல்விக்குக் காரணம் கூறும்போது போதிய நேரமில்லை என்றும், பருவநிலை மாற்றம் என்றும் பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் மழுப்பினார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பாகிஸ்தான் முன்னாள் நட்சத்திர வீரர் சல்மான் பட், “வங்காளதேசமும் உங்களைப் போன்ற அதே சூழலில்தான் விளையாடியது; அவர்கள் என்ன நிலவிலா விளையாடினார்கள்?

நமது காலத்தில் 14 மாதங்கள் வரை போட்டிகள் இல்லாமல் இருந்தது, ஆனால் இப்போது உங்களுக்குச் சொந்த மண்ணிலேயே விளையாட வாய்ப்புக் கிடைத்தும் இப்படித் தோற்றுள்ளீர்கள்” என்று கேப்டன் ஷான் மசூதை கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்திலும் வங்காளதேசம் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்த வரலாற்றுத் தோல்வியின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், பாகிஸ்தான் அணி அடுத்ததாகத் தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் மே 30 அன்றும், இரண்டாவது போட்டி ஜூன் 2 அன்றும், மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி ஜூன் 4 அன்றும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.