தமிழக அரசின் அரசு கேபிள் செட் டாப் பாக்ஸ் (TACTV) இல் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் நீக்கப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இதனை நெட்டிசன்கள் மற்றும் எதிர்க்கட்சியினரும் “ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் செயல்” என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் #SaveTNMedia என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வரும் நிலையில், இது செய்தி சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கையாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரிய பேசுபொருளாக மாறி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, பலரும் 2018 ஜூன் 11ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தை நினைவூட்டியுள்ளனர். அப்போது, அரசு கேபிள் சேனலில் 124ஆம் இடத்தில் இருந்த புதிய தலைமுறை 499ஆம் இடத்துக்கு மாற்றப்பட்டு, தமிழ் மொழி சேனல் வரிசையிலிருந்து பிற மொழி சேனல் வரிசைக்குத் தள்ளப்பட்டிருந்தது. அந்த சமயம், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர், “இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்” என சட்டப்பேரவையில் கடுமையாக விமர்சித்து, “கவனயீர்ப்பு தீர்மானம்” கொண்டுவந்திருந்தார். தற்போது அதே கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், சேனல் முழுவதுமாக நீக்கப்பட்டிருப்பது இரட்டை நிலைப்பாடு எனக் கூறி, “அப்போது பின்னுக்கு தள்ளினீர்கள் என்று கூறினீர்கள், இப்போது நேரடியாக தூக்கிட்டீர்கள் — இது ஜனநாயக நசிவு அல்லவா?” என பொதுமக்களும் எதிர்க்கட்சியினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.