உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜில், ஆசிரியை திட்டியதால் 10 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5-ஆம் வகுப்பு படித்து வந்த நிதி என்ற அந்தச் சிறுமி, வழக்கம் போல பள்ளிக்குச் சென்றபோது, அவரது சீருடை அழுக்காக இருந்ததாகக் கூறி பெண் ஆசிரியை ஒருவர் அனைவர் முன்னிலையிலும் கடுமையாகத் திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்தச் சிறுமி, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தும் யாரிடமும் பேசாமல் அழுதுகொண்டே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆசிரியை செய்த அவமானத்தைத் தாங்க முடியாமல், தனது அறைக்குச் சென்ற சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
விளையாடச் சென்ற அவரது தங்கை, அக்கா பிணமாகத் தொங்குவதைப் பார்த்து அலறியது அங்கிருந்தவர்களைக் கலங்க வைத்தது. “குழந்தைகளின் மனநிலை தெரியாமல் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் ஒரு உயிரையே பறித்துள்ளது” என உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் கொந்தளித்துள்ளனர். தற்போது இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
