இந்தியத் திருமணங்கள் என்றாலே கனமான பட்டுச் சேலைகள், ஜொலிக்கும் நகைகள் மற்றும் விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட கூந்தல் அலங்காரங்களே நம் நினைவுக்கு வரும். ஆனால், இவற்றுக்கெல்லாம் மாறாக, மொட்டைத் தலையுடன், எந்தவிதத் தயக்கமும் இன்றி மணமேடை ஏறி ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மணமகள் மஹிமா காய்.
மஹிமா காய்க்கு சிறுவயதிலேயே ‘அலோபீசியா’ (Alopecia) எனப்படும் தன்னுடல் தாக்க நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்குத் தலையில் முடி உதிரத் தொடங்கியது. ஒரு பெண்ணின் அழகு அவளது கூந்தலில் தான் இருக்கிறது என்று சமூகம் நம்பும் சூழலில், முடி உதிர்தல் மஹிமாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது. பல ஆண்டுகள் சிகிச்சை, சமூகத்தின் கேலிப் பேச்சுகள் மற்றும் ஒளிந்து வாழ வேண்டிய கட்டாயம் என அவர் பல்வேறு வலிகளை அனுபவித்துள்ளார்.
View this post on Instagram
தனது திருமண நாளிலாவது செயற்கை முடி (Wig) அல்லது அலங்காரங்களைச் செய்து தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. மாறாக, தான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே உலகிற்குத் தெரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். விக் அணியாமல், மொட்டைத் தலையுடனேயே மணக்கோலத்தில் அவர் மேடை ஏறியபோது, அங்கிருந்தவர்கள் வியந்தனர். ஆனால் அவரது முகத்தில் இருந்த புன்னகையும், தன்னம்பிக்கையும் அந்த வியப்பை மரியாதையாக மாற்றியது.
இது குறித்து மஹிமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுகையில், “இது ஒரு புரட்சியோ அல்லது எதிர்ப்போ அல்ல; இது எனக்கான விடுதலை. மற்றவர்களின் எதிர்பார்ப்புக்காக என்னை நான் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. என்னைப் போன்ற உடலமைப்பைக் கொண்டவர்களுக்கு இந்தச் சமூகம் வகுத்துள்ள விதிகளை உடைக்கவே இந்த முடிவை எடுத்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மஹிமாவின் திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. அலோபீசியா பாதிப்புள்ள ஆயிரக்கணக்கான பெண்கள், “மஹிமாவின் இந்தத் துணிச்சல் எங்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். முடி என்பது வெறும் உறுப்புதான், அது ஒரு பெண்ணின் ஆளுமையையோ அல்லது அழகையோ தீர்மானிக்காது என்பதை மஹிமா காய் உலகுக்கு நிரூபித்துள்ளார்.
