மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் 30 வயது இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோலாப்பூர் விஜாப்பூர் நாக்கா பகுதியைச் சேர்ந்த சச்சின் மச்சிந்திர மானே என்ற இளைஞர், கடந்த 14 நாட்களாகக் காணவில்லை எனப் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சைஃபுல் பகுதியில் உள்ள முட்புதர் நிறைந்த காட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிட்னஸ் ட்ரெய்னராக (Fitness Trainer) பணியாற்றி வந்த சச்சின், கடந்த மார்ச் 14-ம் தேதி அன்று “அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்துவிடுகிறேன்” என்று தனது மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

ஆனால், அதன்பிறகு அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆன நிலையில், அவர் வீடு திரும்பவே இல்லை. 14 நாட்களாக அவரைத் தேடி வந்த நிலையில், தற்போது அவரது உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைப்பால் அவர் தூக்கிட்டுள்ளதும், அருகில் அவரது செல்போன் மற்றும் பைக் கிடந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

சச்சினுக்குக் கல்யாணி என்ற மனைவியும், மூன்று வயதில் ஒரு மகளும், ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளனர். சச்சினின் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், இது தற்கொலையா அல்லது யாராவது இவரைக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மையான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு இளம் குடும்பத் தலைவர் இப்படி மர்மமான முறையில் உயிரிழந்தது சோலாப்பூர் மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.