குஜராத் மாநிலத்தில் பணத் தகராறு காரணமாகத் தொழிலதிபர் ஒருவரின் மனைவி, குடும்ப நண்பர்களாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வசந்த் அகேடிவாலா என்ற தொழிலதிபரின் மனைவி சாந்திபென், கடந்த மார்ச் 23-ஆம் தேதி இரவு பால் வாங்குவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர், அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் போலீசில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, சாந்திபென் தங்களுக்குத் தெரிந்த குடும்ப நண்பரான ரேகா ரத்தோடு என்பவரின் கடைக்குள் நுழைவதும், அதன்பிறகு அங்கிருந்து வெளியே வராததும் கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. ரேகா ரத்தோடு தனது மரச்சாமான்கள் (Furniture) மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழிலுக்காகச் சாந்திபென்னிடம் இருந்து சுமார் கிட்டத்தட்ட 1 கிலோ மற்றும் 2 லட்ச ரூபாய் பணத்தைக் கடனாக வாங்கியுள்ளார்.

சாந்திபென் தனது நகைகளையும் பணத்தையும் திரும்பக் கேட்டதால், அதைத் கொடுக்க முடியாமல் தவித்த ரேகாவும் அவரது கணவரும் சேர்ந்து சாந்திபென்னை தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, கடைக்கு வந்த அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.

ஆதாரங்களை மறைப்பதற்காக உடலை எரித்ததும் தெரியவந்துள்ளது. இந்தச் சதித் திட்டத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் இரண்டு கூட்டாளிகளையும் சேர்த்து மொத்தம் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நம்பிக்கைக்குரிய நண்பர்களே பணத்திற்காக ஒரு பெண்ணைக் கொலை செய்த சம்பவம் குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.