மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மூண்டுள்ள போர், இப்போது உலக நாடுகளின் எரிசக்தி தேவையில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஈரானால் ‘ஹோமுஸ் ஜலசந்தி’ மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை 398 ரூபாய்க்கும், டீசல் 382 ரூபாய்க்கும் விற்பனையாகும் நிலையில், நிலைமையைச் சமாளிக்க அந்நாட்டு அரசு வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என அறிவித்து, ‘ஒர்க் ப்ரம் ஹோம்’ முறையைக் கட்டாயமாக்கியுள்ளது.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க 3.7 பில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்த சீனா, இந்த இக்கட்டான நேரத்தில் உதவி செய்யாமல் கையை விரித்துவிட்டது.
இதனால் நிலைகுலைந்த இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் உதவி கோரினார். அடுத்த சில மணிநேரங்களிலேயே ‘அண்டை நாட்டுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைப்படி, இந்தியா 20,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் டன் பெட்ரோலை அவசரகால உதவியாக இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
“ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்” என இந்தியாவிற்கு இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புகழாரம் சூட்டியுள்ளார்.
