ஹரியானா மாநிலத்தில் அதிர்ச்சியூட்டும் தேன் பொறி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த அனில் குமார் என்ற இளைஞர், ஒரு பெண்ணின் மிஸ்டு கால் மூலம் தொடர்பில் சிக்கினார்.
அதன் பேரில் ஃபரிதாபாத் என்ற இடத்திற்கு வந்த அவர், கும்பலால் சிறைபிடிக்கப்பட்டு, ஆடைகளை கழற்றச் செய்து, வீடியோ எடுக்கப்பட்டதோடு, பொய்யான பாலியல் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டப்பட்டார்.
மேலும், ரூ.10,000 மற்றும் அவரது செல்போனும் பறிக்கப்பட்டன. பின்னர் தப்பிக்க வாய்ப்பு கிடைத்தபோது, அனில் குமார் நிர்வாணமாக ஓடி, கூரையின் மீது குதித்து தப்பினார்.
அந்த நேரத்தில், அவரை ஒரு திருடன் என்று தவறாக நினைத்த உள்ளூர்வாசிகள், பிடித்து அடித்தனர். பின்னர் அவர் தனது துயரத்தை விளக்கிச் சொன்னபோது, மக்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவம் குறித்து புகார் அளித்த அனில் குமாரிடம், போலீசார் ஆடைகள் அணிவித்து, அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேருக்கு எதிராக கடத்தல், கொள்ளை, தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணையில், அனிலுடன் வந்த அவரது நண்பர் கௌரி சங்கருக்கும் இந்தக் கும்பலுடன் தொடர்பு இருப்பத அதிர்ச்சி தகவலும் வெளிச்சத்திற்கு வந்தது. கும்பல் பெண்களில் ஒருவரின் கணவரான தீபக் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இளைஞர்களை கவர்ந்து சிக்க வைக்கும் தேன் பொறி கும்பல்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளூர்வாசிகளிடையே எழுந்துள்ளது.
