தேர்தல் தோல்வி பயத்தால் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குத் தூக்கமே போய்விட்டது என்றும், அதன் காரணமாகவே தற்போது புதிய திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக என்பது வெறும் தில்லுமுல்லு கட்சி தான் என்றும், அதிமுகவில் இருந்து ஒதுக்கப்பட்டவர்களுக்குப் பதவிகளை வாரி வழங்கி வருவதால் திமுகவின் சீனியர் நிர்வாகிகளே கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஒரு பச்சோந்தி போலக் கட்சி மாறி வருபவர் என்றும், அவர் திமுகவின் ஊதுகுழலாகச் செயல்படுவதாகவும் சாடினார்.
ஓபிஎஸ்-ன் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டதாகத் தெரிவித்த செல்லூர் ராஜு, தொடக்கத்திலிருந்தே அவர் திமுகவை ஆதரித்ததால்தான் தங்களுக்குள் சண்டையே வந்ததாக ஒரு ரகசியத்தை உடைத்தார்.
இறுதியாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை அதிமுக தான் எப்பொழுதும் ‘பாஸ்’ என்றும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
