மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள திகம்கட் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு அவலம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அதாவது ஒரு தந்தை சிறுநீர் பிரச்சனை காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அவருடன் அவருடைய மகனும் சென்றார்.

இந்நிலையில் அந்த மருத்துவமனையில் குளுக்கோஸ் போடுவதற்கான IV ஸ்டாண்ட் இல்லாததால் அந்த சிறுவனை குளுக்கோஸ் பாட்டிலை பிடித்துக் கொண்டு நிற்குமாறு மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர். தன்னுடைய தந்தைக்காக அந்த சிறுவனும் குளுக்கோஸ் இறங்கும் வரை பாட்டிலை கையில் பிடித்தவரை நின்று கொண்டிருந்தான்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மருத்துவமனை நிர்வாகம் ஊழியர் ஒருவர் குளுக்கோஸ் போடுவதற்கான ஸ்டாண்டை எடுக்க சென்றிருந்ததாகவும் அதுவரை தான் சிறுவன் பிடித்து இருந்ததாகவும் விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலானதால் தற்போது இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கொடுக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.