உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைச் சுற்றியுள்ள புனிதத்தன்மையை நிலைநாட்ட, கோயில் அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு அசைவ உணவுகளுக்கு அம்மாநில அரசு அதிரடித் தடை விதித்துள்ளது.

மேலும் ஆன்லைன் உணவு விநியோகத் தளங்கள் மூலம் அசைவ உணவுகள் விநியோகிக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘பஞ்ச்கோசி பரிக்ரமா’ பாதையை உள்ளடக்கிய பகுதிகளில் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் அசைவ உணவுகளை விநியோகம் செய்ய முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையின் ஒரு பகுதியாக, அயோத்தி மற்றும் பைசாபாத்தை இணைக்கும் ‘ராம் பாதை’ உள்ளிட்ட பகுதிகளில் மது விற்பனைக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அசைவ உணவு அல்லது மதுபானங்களை வழங்கக் கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த விதிகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் டெலிவரி முகவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அயோத்தி உதவி உணவு ஆணையர் மாணிக் சந்திர சிங் தெரிவித்துள்ளார். புனித நகரமான அயோத்திக்கு வரும் பக்தர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.