மத்திய பிரதேச மாநிலம் சிவபுரியில், திருமணப் பத்திரிகை கொடுக்க வந்ததாகக் கூறி 35 வயது மூதாட்டியை அவரது சொந்தப் பேத்தியின் கண்ணெதிரேயே சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ராமசகி தாகட் என்ற பெண், தனது 13 வயது பேத்தியுடன் வீட்டில் இருந்தபோது, பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் “அம்மா, திருமணப் பத்திரிகை கொடுக்க வந்துள்ளோம், கதவைத் திறங்கள்” என்று அன்பாகக் கூப்பிட்டுள்ளனர்.
அவர்கள் சொன்னதை நம்பி ராமசகி கதவைத் திறந்ததும், அந்த நபர்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெறுவது போல நடித்து, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரது தலையிலேயே சுட்டுவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் 35 ஏக்கர் நிலப் பிரச்சனை இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராமசகி தனது பங்கிற்கு வந்த நிலத்தைத் தனது மகனுக்கு மாற்ற முயன்றதை அவரது மாற்றாந்தாய் மகன்கள் எதிர்த்து வந்த நிலையில், இந்தத் திட்டமிட்ட கொலை நடந்துள்ளதாகப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கிராமத்தையே உலுக்கியுள்ள இக்கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
