மும்பையைச் சேர்ந்த காமெடி கலைஞர் கரண் ஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ தற்போது லட்சக்கணக்கான இதயங்களை வென்றுள்ளது. சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் கரண், மும்பை மெட்ரோவில் ஒரு உதவியும் இன்றி தனியாகப் பயணம் செய்த தனது அனுபவத்தை அதில் பதிவு செய்துள்ளார்.

மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் வசதி, சக்கர நாற்காலிக்கு ஏற்ற உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் கவுண்டர் மற்றும் ரயிலில் ஏறும் போது இருந்த எளிதான வசதிகள் என அனைத்தும் தனக்கு ஒரு புதிய சுதந்திர உணவைத் தந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

 

“பெரும்பாலானவர்களுக்கு இது ஒரு சாதாரண மெட்ரோ பயணமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது சுதந்திரம். காத்திருக்கத் தேவையில்லை, யாரிடமும் உதவி கேட்கத் தேவையில்லை; இது எனக்கான தனிப்பட்ட அடையாளம்” என்று கரண் பதிவிட்டிருந்த கேப்ஷன் பலரையும் உருக வைத்துள்ளது. காவல்துறை மற்றும் மெட்ரோ ஊழியர்களின் கனிவான அணுகுமுறைக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், நகரக் கட்டமைப்பு என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த மெட்ரோ பயணமே சாட்சி என மும்பை மெட்ரோ நிர்வாகத்தைப் பாராட்டி வருகின்றனர்.