ஹரியானா மாநிலத்தின் பானிபட் மாவட்டத்தில் உள்ள ஒரு எண்டர்பிரைசஸ்’ ஆடை கிடங்கில் கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குட்டி, ராமா, நீலம் ஆகிய பெண் தொழிலாளர்கள் இந்தக் கிடங்கில் துணிகளைப் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இவர்களது பிஞ்சுக் குழந்தைகளான சோனம், பிரக்யா மற்றும் ரோஷ்னி ஆகிய மூவரும் அங்குள்ள பெரிய துணிக்குவியல்களுக்கு இடையே கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர்.

திடீரெனக் குழந்தைகள் காணாமல் போனதால், பதற்றமடைந்த தாய்மார்கள் கிடங்கு முழுவதும் தேடினர். சுமார் அரை மணி நேரத் தேடலுக்குப் பிறகு, அங்குச் சரிந்து கிடந்த ஒரு பெரிய துணிக்குவியலை அகற்றிப் பார்த்த போது, மூன்று குழந்தைகளும் அதற்குள் சிக்கிக் கிடப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மீட்கப்பட்ட குழந்தைகள்  அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், இரண்டரை வயது சோனம் மற்றும் நான்கரை வயது பிரக்யா ஆகிய இரு சிறுமிகளும் மூச்சுத்திணறல் காரணமாக ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஐந்து வயது சிறுமி ரோஷ்னி மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது உயிருக்குப் போராடி வருகிறார். மருத்துவமனையில் சுயநினைவு திரும்பிய சிறுமி ரோஷ்னி பேசுகையில், “நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு பெரிய துணிக்குவியல் எங்கள் மீது விழுந்தது.

உள்ளே இருட்டாக இருந்ததால் மூச்சுவிட முடியாமல் தவித்தோம். காப்பாற்றும்படி அம்மாவை நோக்கிப் பலமுறை சத்தமிட்டும் எங்களது குரல் வெளியே கேட்கவில்லை” என்று கண்ணீருடன் கூறியுள்ளார். இந்த விபரீதச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.