கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது..

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. பவுத்திரம், காந்திகிராமம், க. பரமத்தி ஆகிய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் திமுகவினர் எதிர்ப்பால் 10 இடங்களில் இன்னும் வருமானவரித்துறை சோதனை நடத்தாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடத்தில் காலை முதல் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டன. கரூர், கோவை சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், அண்டை மாநிலமான கேரளாவின் பாலக்காடு, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தன.  அதாவது, செந்தில் பாலாஜியின் நண்பரான அரசு ஒப்பந்ததாரர் சங்கர் என்பவருடைய இடத்தில் சோதனை நடத்தப்பட்டது.

அதேபோல திமுக பிரமுகராக இருக்கக்கூடிய செந்தில் கார்த்திகேயன் என்பவரின் வீடு, அலுவலகத்திலும்  சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசின் ஒப்பந்ததாரர்கள் முறையாக வருமான வரி செலுத்தினார்களா? வரி ஏய்ப்பில் ஈடுபட்டார்களா என இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது செந்தில் பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.