இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதராக இருந்த அப்துல் பாசித், தற்போது ஒரு கற்பனையான போர்ச் சூழலை முன்வைத்து இந்தியாவுக்குப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த விவாதம் ஒன்றில் பேசிய அவர், “ஒருவேளை அமெரிக்கா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், நாங்கள் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் இந்தியாவின் மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவோம்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டால், அதற்கு இந்தியா எப்படிப் பொறுப்பாகும்? என்ற கேள்விக்கு, “எங்களை யாராவது தீய நோக்கத்தோடு பார்த்தால், இந்தியா மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அதன் பிறகு என்ன நடக்கும் என்பதைப் பார்த்துக் கொள்ளலாம்” என்று திமிராகப் பேசியுள்ளார்.

2014 முதல் 2017 வரை டெல்லியில் தூதராக இருந்த ஒருவரே, இப்படிப் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது சர்வதேச அளவில் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

தற்போது ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தன் நாட்டுப் பிரச்சினையைத் திசைதிருப்பவே அப்துல் பாசித் இப்படிப் பேசி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.