ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாக போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் பாதுகாப்பு வளையங்களை மீறி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடங்கப்பட்ட இந்தப் போரில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இதற்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேலிய நகரங்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் அலையலையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியுள்ளதுடன், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதனால் ஈரானில் இருந்து இஸ்ரேல் எல்லையை நோக்கி ஏவுகணைகள் ஏவப்படுவதை அந்நாட்டு ராணுவம் கண்டறிந்துள்ளதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ள இந்த உத்தரவில், பொதுமக்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் அச்சுறுத்தல்களைத் தடுக்கச் செயல்பட்டு வரும் நிலையில், உயிரிழப்புகளைத் தவிர்க்க மக்கள் ராணுவத்தின் வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என இஸ்ரேல் அரசு வலியுறுத்தியுள்ளது.