ஈரான் உடனான போர் பதற்றம் காரணமாக உலக நாடுகள் மட்டுமின்றி, தற்போது அமெரிக்காவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க குடிமக்களின் பாக்கெட்டுகளை பணவீக்கம் பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது.

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் மூடியுள்ளதால், உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலி உடைந்துள்ளது. ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் இந்தப் போரில் குதித்துள்ள நிலையில், அதன் விளைவுகளைத் தற்போது அமெரிக்க மக்களே அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு:அமெரிக்காவில் எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கேலன் (3.8 லிட்டர்) பெட்ரோல் விலை 1 டாலர் உயர்ந்து, சராசரியாக 4.09 டாலராக விற்பனை செய்யப்படுகிறது. இது 2022 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பதிவான அதிகபட்ச விலையாகும். கடந்த ஆண்டு 3.64 டாலராக இருந்த ஒரு கேலன் டீசல் விலை, தற்போது 5.53 டாலராக எகிறியுள்ளது. டீசல் விலை உயர்வால் விவசாயம், உற்பத்தித் துறை மற்றும் போக்குவரத்துத் துறைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் (Amazon), வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் விநியோகக் கட்டணத்துடன் கூடுதலாக 3.5 சதவீதம் ‘எரிபொருள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ்’ கட்டணத்தை வசூலிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதேபோல், அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனங்களும் பயணச் சீட்டுகளின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.

மேலும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்குத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், உள்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த விலைவாசி உயர்வு அவருக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. போரைத் தொடர்வதா அல்லது பொருளாதாரத்தைச் சீரமைப்பதா என்ற இக்கட்டான நிலையில் ட்ரம்ப் நிர்வாகம் உள்ளது. ஒருபுறம் போரினால் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், மறுபுறம் பொதுமக்களின் அதிருப்தியும் அதிகரித்து வருகிறது.